புதுச்சேரில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது
1 min read
The Congress government was overthrown in Puducherry
22.2.2021
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார். இதனை அடுத்து அவரது அரசு கவிழ்ந்தது.
விலங்கிய எம்.எல்.ஏக்கள்
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அவரது ஆட்சி நிறைவடையும் நிலையில் அவரது கட்சியில் இருந்து ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களாக பதவி விலக ஆரம்பித்தனர்.
முதலில் நாராயணசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேல் 6 மாதங்களுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து முதல் அமைச்சருக்கு அடுத்த நிலையில் இருந்த அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். அதன்பின் அமைச்சர், மல்லாடி கிருஷ்ணராவ் பதவி விலகிறார்.
அதேபோல் எம்எல்ஏ க்கள் தீப்பாய்ந்தான், ஜான் குமார் ஆகியோரும் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால் 30 பேர் கொண்ட புதுச்சேரி சட்டசபையில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. ஆளும் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பலம் 14 என்ற சம அளவில் இருந்தது.
இதைத்தொடர்ந்து நாராயணசாமி பெரும்பான்மையை சட்டசபையில் 22-ந்தேதி (இன்று) நிரூபிக்க வேண்டும் என்று புதிதாக கவர்னர் பொறுப்பை ஏற்ற டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.
ஆலோசனை
இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணனும், தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடேசனும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால் சட்டசபையில் நாராயணசாமி அரசின் பலம் 12ஆக குறைந்தது. இதுதொடர்பாக நேற்று மாலையும், இன்று காலை 8 மணிக்கும் நாராயணசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
நாராயணசாமி பேச்சு
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. முதல்-&மந்திரி நாராயணசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது அவர் உரையாற்றினார்.
நாராயணசாமி பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
கவிழ்ந்தது
இதையடுத்து நாராயணசாமி உள்பட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருந்து புறக்கணிப்பு செய்தனர். பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்று கூறியபடி வெளியேறினார்கள்.
இதையடுத்து சபாநாயகர் சில உத்தரவுகளை வெளியிட்டார். நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. அவர் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என்று சபநாயகர் தெரிவித்தார்.
இதனால் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.