தூரத்துப் பார்வையில் ஆன்மிகம்
1 min read
Spirituality in the long run
அது ஒரு அழகான மலை பிரதேசம். சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து பொழுதை போக்கும் இடம். அப்போதுதான் முதன்முறையாக அங்கு வந்த ஒருவன் மாடி கட்டிடத்தின் மேல் நின்று இயற்கை அழகை ரசித்துக் கொண்டிக்கிறான்.
அப்போது சற்று தொலைவில் அவன் ஒரு அதிர்ச்சியான காட்சியை காண்கிறான். புதர்கள் நிறைந்த காடு அது. அதனுள் ஒருவன் நடந்து செல்கிறான். நடந்து செல்லும் அவனுக்கு அடுத்த புதர் காட்டில் புலிகள் ஹாயாக சுற்றிக் கொண்டிக்கின்றன.அவனக்கு சற்று முன்பு சிறுத்தை ஒன்று செல்கிறது. இவைகளை எல்லாம் அறியாமல் அவன் ஏன் அங்கு சென்று கொண்டிக்கிறான் என்ற கேள்விக்கு மாடியில் நிற்கும் சுற்றுலா பயணிக்கு ஏற்படுகிறது.
அவன் நல்ல எண்ணம் கொண்டவன். தன் முன்னால் ஒருவன் ஆபாயகரமான இடத்தை நோக்கி செல்வதை அவனால் பொறுத்துக் கொண்டிக்க மனம் இல்லை. மாடியில் நின்றபடி கத்துகிறான். அங்கே போகாதே… போகாதே… என்று.
புதர் பகுதிக்கு சென்றவனுக்கோ யாரைநோக்கி அந்த நபர் கத்துகிறார் என்பதை முதலில் கணிக்க முடியவில்லை. ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் அவன் தன்னை நோக்கிதான் எச்சரிக்கை செய்கிறான் என்பதை உணர்ந்து கொள்கிறான்.
ஆனால் அவனுக்கோ அந்த எச்சரிக்கை சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது. கையை அசைத்துக் கொண்டு அவனது பயணத்தை தொடர்கிறான். சற்று நேரத்தில் அவன் மறைந்து விடுகிறான். மாடியில் நின்றவனுக்கோ ஒன்றும் ஓடவில்லை. காட்டுக்குள் சென்றவனை புலியோ சிறுத்தையோ அடித்து கொன்றிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். தனது ஐயப்பாட்டை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள அந்த நேரத்தில் அங்கு வேறு யாரும் இல்லை.
மாலை பொழுதில் அவன் அவசர அவசரமாக ஊர் திரும்புகிறான். என்ன ஆச்சரியம் புதருக்குள் சென்றவன் அவன் எதிரே.
என்னப்பா இப்படி அபாயகரமான இடத்துக்கெல்லாம் போறே?
சாமி அது பாதுகாப்பான நல்ல வழிதான். அங்கே ஒரு வகை காட்டுப்பழம் பழுத்திருக்கு. அதை பறிக்கத்தான் போனேன் என்றான்.
சுற்றுலா பயணி மேலும் அவனிடம் பேசாமல் தன்னுடன் வந்தவனிடம் இந்த பழங்களை பறிப்பதற்காக உயிரை பயணம் வைத்து அந்த இடத்துக்கு போக வேண்டுமா? அவங்களுக்கெல்லாம் சொன்னா தெரியாது. அனுபவிச்சாத்தான் தெரியும்.
-இந்த சம்பவம் ஓர் கற்பனைதான். அந்த சுற்றுலா பயணி நல்ல மனிதர்தான். அதற்காக அவர் சொன்ன எச்சரிக்கை தகவல் உண்மை என்று ஆகிவிடாது.
அது அடர்ந்த முட்புதர்கள் நிறைந்த காடுதான். ஆனால் அங்கே பாதுகாப்பான ஒரு ஒத்தயடி பாதை உள்ளது. அந்த பாதை தூரத்தில் நின்று பார்ப்பவர்களுக்கு தெரியாது. அதேபோல் அருகில் இருக்கும் புலிகள் சரணாலயத்தை சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டிருப்பதும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர் சிறுத்தையாக கருதியது கழுதை புலி. அது மனிதர்களை ஒன்றும் செய்யாது. இதுவெல்லாம் அந்த சுற்றுலாப்பயணிக்கு தெரியாது. அவரை பொறுத்தவரை அந்த காட்டுக்குள் சென்றவன் ஒரு முரடனாகவும், மூடனாகவும் தெரிந்தான். ஆனால் அவன் அனைத்தும் அறிந்தவன்தான். பாதுகாப்பாக வழியில் சென்றான். அரியவகை கனிகளை தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பறித்து வந்தான்.
இதேபோல்தான் ஆன்மிகமும். கடவுளை நம்பாதவர்கள் ஆன்மிக வழியை முட நம்பிக்கை என்று விமர்சனம் செய்கிறார்கள். அவர் கள் நல்லவர்களாக கூட இருக்கலாம். ஆனால் ஆன்மிகத்தின் உள் அர்த்தம் தெரியாது. ஆன்மிகத்தை தூரத்தில் இருந்து விமர்சனம் செய்கிறார்கள். அருகில் வந்து பார்த்தால்தான் அதன் அருமை புரியும்.
காட்டுக்குள் சென்று கனிகளை பறித்து உண்ட மகிழ்ச்சியையும் அவன்தான் அறிவான். ஆனால் அது மற்றவர்களுக்கு தெரியாது. இறைவன் வழிபாட்டில் கிடைக்கும் நன்மை நாத்திகர்களுக்கு தெரியாது. அதை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும்.
இதே கருத்து தங்கள் மதம்தான் பெரியது- உண்மையானது என்று அறைகூவல் விடுவோருக்கும் பொருந்தும்.
-கடையம் பாலன்