நேபாளம் விமான விபத்தில் இதுவரை 21 உடல்கள் மீட்பு
1 min read
21 bodies recovered so far in Nepal plane crash
30.5.2022
நேபாளம் விமான விபத்தில் இதுவரை 21 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
விமான விபத்து
நேபாளத்தில் உள்ள ஒரு தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் தாரா ஏர் விமானம் நேற்று காலை 9.55 மணிக்கு 4 இந்தியர் உள்பட 22 பேருடன் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமானது.
விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் ரேடார் பார்வையில் இருந்து மறைந்தது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் விமானம் இமயமலையின் பனிபடர்ந்த பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் பலியாகி இருக்கலாம் என கூறப்பட்டது.
நேபாளத்தில் விபத்தில் சிக்கிய விமானம் விழுந்த சனோஸ்வர், தசாங் 2, முஸ்டாங் பகுதியில் மீட்புப் படையினர் விமான பாகங்களை கண்டுபிடித்தனர்.
அந்த விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்கள் யார் என்பதை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. வைபவி பெந்த்ரே (51), அவரது முன்னாள் கணவர் அசோக் குமார் திரிபாதி (54), அவர்களது மகன் தனுஷ் (22), மகள் ரித்திகா (15) என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்தனர். இவர்கள் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.
இந்நிலையில், விபத்துக்கு உள்ளான விமானத்தில் மேற்கண்ட 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்களும் பயணித்தனர். இதுவரை 21 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய ஒருவரின் உடலை மீட்கும் பணியில் மீட்புக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.