ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைப்பு
1 min read
Hearing on O. Panneerselvam’s appeal petition adjourned to next week
28.11.2023
அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட நீக்க தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்து சென்னை ஐகோர்ட்டு கடந்த மார்ச் 28-ந்தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்பில், பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளதால், 2,460 பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என நீதிபதி தெளிவுபடுத்தி இருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனடியாக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, தடை விதிக்க மறுத்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் வக்கீல் கவுதம்சிவசங்கர் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் 5-ந்தேதி மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்க கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துவிட்டு, சிவில் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்கு வசதியாக விசாரணையை தள்ளிவைக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்கக்கூடாது’ என்று கூறப்பட்டிருந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டனர். பிறகு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்றனர்.
அதன்படி அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.