லாஸ் ஏஞ்சல்சில் தண்ணீர் பற்றாக்குறையால் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்
1 min readLos Angeles struggling to control wildfires due to water shortage
11/1/2025
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மலைப்பகுதியில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவியது.
மேலும் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். 10,000 வணிக கட்டிடங்கள், 30,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. சுமார் ரூ.13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஹாலிவுட் நகரமான லாஸ் ஏஞ்சல்சில் நடிகர்-நடிகைகளின் வீடுகளும் தீயில் எரிந்துள்ளன.இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தீயை அணைப்பதற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்து வருகிறார்கள். இதனால் தீயை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.
இதுகுறித்து தீயணைப்புத்துறை தலைவர் ஆடம் வான் கெர்பன் கூறும்போது, சில தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறார்கள். தீயணைப்பு வீரர்களை நாம் மேம்படுத்த வேண்டும், மாற்றியமைக்க வேண்டும் மற்றும் சமாளிக்க வேண்டும் என்றார். இதற்கிடையே கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் கூறும்போது, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத்தீயை பயன்படுத்தி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து பசிபிக் பாலிசேட்ஸ் மற்றும் ஈடன் பகுதிகளில் இரவுநேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 5 இடங்களில் பெரிய அளவில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது.