விருதுநகரில் தீ விபத்து- 20 குடிசை வீடுகள் சேதம்
1 min read
Fire accident in Virudhunagar – 20 shacks damaged
2.3.2025
விருதுநகர் மேலத்தெரு பேட்டையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருக்கின்றன. இந்த குடியிருப்பில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவியது. இதனால் குடியிருப்புகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியேறினர்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மூன்று தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 20 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இருப்பினும் குடியிருப்புகளில் உள்ளே எவரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் இருந்த சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீ விபத்து ஏற்பட்டு அடுத்தடுத்த வீடுகளில் தீ பரவியது தெரியவந்துள்ளது. அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.