பிரதமர் வருகை; ராமேசுவரத்தில் பலத்த பாதுகாப்பு
1 min read
Prime Minister’s visit; heavy security in Rameswaram
3.4.2025
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். இந்த விழாவில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் வருகையையொட்டி மத்திய சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், ராமேஸ்வரம் முழுவதும் தற்போது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்திறங்கும் ஹெலிபேடு தளம், மண்டபம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், ராமநாதசுவாமி திருக்கோவில் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் சுமார் 3,500 போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மண்டபம் முதல் ராமநாதசுவாமி திருக்கோவில் வரை சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாம்பனில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை குந்துகால் துறைமுகத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுப்படகுகளை பாம்பனை விட்டு அப்புறப்படுத்தி தங்கச்சிமடம் பகுதியில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.