அமைச்சர்கள் 3 பேர் மீது அ.தி.மு.க., நம்பிக்கையில்லா தீர்மானம்; சபாநாயகர் அனுமதி மறுப்பு
1 min read
AIADMK moves no-confidence motion against 3 ministers; Speaker denies permission
15.4.2025
அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கே.என்.நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அ.தி.மு.க., சார்பில் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. ”நாங்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது அவையில் விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்” என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீதும், நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.
இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:
அவையில் உள்ள அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அப்பாவு இடம் முறையிட்டோம். கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டது.
அதனால் வெளிநடப்பு செய்துள்ளோம். கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை மடைமாற்றம் செய்யவே மாநில சுயாட்சி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். இது முழுவதும் ஏமாற்று வேலை. அ.தி.மு.க.,வினரை தொடர்ந்து புறக்கணிப்பதிலேயே சபாநாயகர் நேரத்தை செலவிடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.